×

விவசாய வளம் பெருக்கும் வேர் விநாயகர்

சுயம்பு லிங்கங்கள் பற்றி நிறைய படித்திருக்கிறோம். தரிசித்தும் இருக்கிறோம். சுயம்பு விநாயகரைப் பார்த்திருக்கிறீர்களா…? அப்படி ஒரு அதிசய விநாயகரை தரிசிக்க நீங்கள் நாகப்பட்டினம் மாவட்டதிலுள்ள ஆதலையூருக்கு வரவேண்டும். பாண்டவ சகோதரர்களுள் ஒருவரான பீமன் வழிபட்ட தலம்தான் ஆதலையூர். அதனால்தான் மூலவருக்கு பீமேஸ்வரர் என்ற பெயர் வந்தது. இந்தத் தலத்தில், சமீபத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து கோயிலில் மண்டிக் கிடந்த ஆதண்டம் என்ற கொடிகளை அகற்றிக் கொண்டிருந்தார்கள். அக்கொடிகளின் வேர்கள் முடிவில்லாமல் நீண்டு கொண்டே சென்றன. ஓரிடத்தில் அகற்றவே முடியாதபடி வேர்கள் பின்னிக்கிடந்தன. கூர்ந்து கவனித்தபோது, அங்கே வேர்க் குவியலில் விநாயகர் காட்சி தந்தார். ஆம்! பின்னிக் கிடந்த அந்த வேர்களே விநாயகர் ரூபம் கொண்டிருந்தன.

நான்கு கரங்கள், தலையில் கிரீடம், முன்னே நீண்டு ஆசிர்வதிக்கும் துதிக்கை என அச்சு அசலாக விநாயகர் தோற்றம்! கோயிலின் தொப்புள் கொடியாய் நீண்டிருந்த ஆதண்டக் கொடியில் பிறந்த விநாயகர்தான் இப்போது ஆதலையூர் மக்களின் கண்கண்ட தெய்வம்.

விவசாயத்தையே பெரிதும் நம்பி நெல் பயிரிட்டு வரும் இவ்வூர் மக்கள், இந்த விநாயகரைக் கண்டெடுத்த நாள் முதலாய் தங்கள் பயிர்கள் நன்கு செழித்து வளர்வதாக சந்தோஷமடைகிறார்கள்.

இப்போதெல்லாம் ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் முன், ஆனை முகத்தானை (இந்த வேர் விநாயகரை) தேடி வந்து விதைகளை வைத்துப் படைத்து, பிறகுதான் தங்கள் வயல்களிலும் தோட்டங்களிலும் விதைக்கிறார்கள். இவ்வாறு பக்தர்கள் விதை நெல்கள், மற்றும் தானியங்களை படைக்கும் காட்சி காணற்கரியது.

வாழ்வில் நிம்மதியும், சந்தோஷமும் வேர் பிடித்து வளர இந்த வேர் விநாயக பெருமானை தரிசித்து வாருங்கள். கும்பகோணம் – நாகப்பட்டினம் சாலையில், நன்னிலத்திலிருந்து கிழக்கே
4கி.மீ. தொலைவில் உள்ளது, இந்த திருக்கோயில்.

தொகுப்பு: நாகலட்சுமி

The post விவசாய வளம் பெருக்கும் வேர் விநாயகர் appeared first on Dinakaran.

Tags : Lingams ,Adalaiyur ,Nagapattinam ,Ganesha ,Bhima ,Pandava ,Bhimeswarar ,
× RELATED பாரதத்தின் பழமையான சிவலிங்கம்